சென்னையில் நடந்த போட்டியில் மேட்ச் பிக்சிங்? கனடா அணியிடம் ஐசிசி விசாரணை
2026 T20 உலக கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வென்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த உலகக்கிண்ண தொடரில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட கனடா?
கனடிய புலனாய்வு நிகழ்ச்சியான 'The fifth estate' தயாரித்த , 'Corruption, Crime and Cricket' என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கனடா அணியிடம் ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த போட்டியில், கனடா நிர்ணயித்த 174 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பில் 15.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.
ஆவணப்படத்தில், கனடா அணித்தலைவர் தில்ப்ரீத் பஜ்வா வீசிய 5வது ஓவர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பஜ்வா ஒரு நோ பால் மற்றும் 2 வைடு உட்பட 15 ஓட்டங்களை வழங்கினார். இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பயிற்சியாளர்கள் குற்றச்சாட்டு
இதே போல், அணியில் சில குறிப்பிட்ட வீரர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கனடா கிரிக்கெட் வாரியத்தின் மூத்த உறுப்பினர்கள் தன்னை எதொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுத்ததாகவும், போட்டியின் முடிவுகளை மாற்ற திட்டமிட்டதாகவும் கனடாவின் முன்னாள் பயிற்சியாளர் குர்ரம் சோஹன் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் தொலைபேசி உரையாடல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சில வீரர்களைத் தேர்வு செய்ய மறுத்ததால், தனது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்பட்டதாக மற்றொரு முன்னாள் பயிற்சியாளரான புபுது தசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கனடா கிரிக்கெட் வாரியம் மீது புபுது தசநாயக்க வழக்கும் தொடர்ந்துள்ளார்.
ஐசிசி விளக்கம்
"இந்த ஆவணப்படம் குறித்துத் தங்களுக்குத் தெரியும். இருப்பினும், தங்களின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, அதில் உள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது.
ஐசிசி தனது உறுப்பு நாடுகள் தொடர்பான நிர்வாக விவகாரங்களை சட்ட செயல்முறைகளுக்கு உட்பட்டே கையாளுகிறது" என ஐசிசியின் நேர்மைப் பிரிவின் இடைக்காலப் பொது மேலாளர் ஆண்ட்ரூ எப்கிரேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |