உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்... எரிபொருள் பிரச்சினையில் நட்பு நாடுகளுக்கு உதவ முன்வந்துள்ள கனடா
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் பல, எரிபொருள் பிரச்சினை குறித்த பதற்றத்தில் இருக்கும் சூழலில், தன் நட்பு நாடுகளுக்கு உதவுவது என கனடா முடிவு செய்துள்ளது.
எரிவாயு வழங்கல் விடயத்தை வைத்துக்கொண்டு ரஷ்யா மற்ற நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஜேர்மனி முதலான நாடுகள் குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நமது நட்பு நாடுகளுக்கு உதவுவது நமது கடமை என்று கூறியுள்ளார் கனடாவின் துணைப்பிரதமரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland).
நம்மிடம் போதுமான ஆற்றல் உள்ளது என்று கூறியுள்ள அவர், ஆற்றல் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகளை சந்தித்துவரும் நமது கூட்டாளிகளுக்கு உதவுவது அரசியல் ரீதியில் நமது கடமை என்று கூறியுள்ளார்.
எரிபொருளுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இது ஒரு சிக்கலான காலகட்டம் என்று கூறியுள்ள கிறிஸ்டியா, இத்தகைய நேரத்தில் கனடா முன்வந்து, உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
அதாவது, கனடாவில் போதுமான அளவில் திரவ இயற்கை எரிவாயு உள்ளதாம். ஆகவே, எரிபொருள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள தனது கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளுக்கு அந்த திரவ இயற்கை எரிவாயுவை விநியோகிக்க கனடா திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.