டிசம்பர் 1 முதல் கனடா-அமெரிக்க எல்லையில் புதிய நுழைவு விதிகள் அமுல்
Canada Introduces New Border Rules for Americans: டிசம்பர் 1 முதல் கனடா-அமெரிக்க எல்லையில் புதிய நுழைவு விதிகள் அமுலுக்கு வருகிறது.
கனடா அரசு, அமெரிக்காவிலிருந்து தொலைதூர எல்லைப் பகுதிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகள், குறிப்பாக அமெரிக்க சுற்றுலாப் பயணிகள், மீன்பிடி ஆர்வலர்கள், படகு பயணிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சொத்துகள் வைத்திருப்பவர்களை பாதிக்கவுள்ளன.

RABC திட்டம் நிரந்தரமாக நிறுத்தம்
கனடா எல்லை சேவை முகமை (CBSA), பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த Remote Area Border Crossing (RABC) அனுமதி திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம், குறிப்பிட்ட தொலைதூர எல்லைப் பகுதிகள் வழியாக பயணிகள் வழக்கமான சோதனைச் சாவடிகளுக்கு செல்லாமல் கனடாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
நவம்பர் 30, 2026 இரவு 11:59 மணியுடன் அனைத்து RABC அனுமதிகளும் காலாவதியாகும் என்றும், புதிய விண்ணப்பங்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்றும் CBSA தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் 11,000 பயணிகள் பயன்படுத்திய திட்டம்
RABC திட்டத்தை ஆண்டுதோறும் சுமார் 11,000 பேர் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் அமெரிக்கர்களாக இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம், வடக்கு ஒன்ராறியோ மற்றும் தெற்கு மனிடோபா பகுதிகளுக்கு செல்லும் மீன்பிடி ஆர்வலர்கள், படகு பயணிகள், பனிச்சறுக்கு வாகன பயணிகள் மற்றும் விடுமுறை வீட்டு உரிமையாளர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இனி என்ன செய்ய வேண்டும்?
டிசம்பர் 1 முதல், பாதிக்கப்படும் எல்லைப் பகுதிகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் தங்களது வருகையை கட்டாயமாக CBSA அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக நேரடியாக எல்லைச் சோதனை மையத்திற்குச் செல்லலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி அறிக்கை மையங்களை பயன்படுத்தலாம்.
பயணிகள் அடையாள ஆவணங்கள், குடியுரிமை தகவல்கள், உடன் பயணிப்போர் விவரங்கள் மற்றும் வாகனம் அல்லது படகு தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் கொண்டு செல்லும் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாணயங்கள் பற்றியும் அறிவிக்க வேண்டும்.
பால்க்லாந்து தீவுகளில் பிரித்தானியாவின் எண்ணெய் நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் அர்ஜென்டினா தோல்வி
17 தொலைபேசி அறிக்கை மையங்கள்
புதிய முறையை ஆதரிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் 17 அதிகாரப்பூர்வ தொலைபேசி அறிக்கை மையங்கள் செயல்படுகின்றன என்று CBSA தெரிவித்துள்ளது. மேலும் 22 புதிய இடங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
NEXUS உறுப்பினர்களுக்கு சிறப்பு வசதி
கனடா மற்றும் அமெரிக்கா இடையே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான NEXUS திட்ட உறுப்பினர்கள், கனடாவை அடைவதற்கு 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே தொலைபேசி மூலம் வருகையை பதிவு செய்ய முடியும். சாதாரண பயணிகள் வருகைக்குப் பிறகே தகவல் தெரிவிக்க வேண்டும்.
விதிமீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை
புதிய விதிகளை பின்பற்றாமல் கனடாவிற்குள் நுழையும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அபராதம், தற்காலிக காவல், வாகனம் அல்லது பொருட்கள் பறிமுதல் மற்றும் குற்றவியல் வழக்குகள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அபராதம் குறைந்தபட்சம் 1,000 கனேடிய டொலரிலிருந்து தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், கனடாவின் நடைமுறைகளை அமெரிக்க எல்லை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.