ஸ்பெயினில் 39 அறைகள் கொண்ட ஸ்கீ ஹோட்டலை விலைக்கு வாங்கிய மெஸ்ஸி
Lionel Messi Buys 39-Room Ski Hotel in Spain: லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினில் 39 அறைகள் கொண்ட ஸ்கீ ஹோட்டலை வாங்கியுள்ளார்.
உலக கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, தனது வணிக முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஸ்பெயினின் பைரனீஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள 39 அறைகள் கொண்ட சொகுசு ஸ்கீ ஹோட்டலை வாங்கியுள்ளார்.

ஸ்பெயினில் புதிய ஹோட்டல் வாங்கிய மெஸ்சி
அறிக்கையின்படி, மெஸ்ஸியின் ரியல்எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான Edificio Rostower Socimi SA நிறுவனம், ஸ்பெயினின் புகழ்பெற்ற Baqueira-Beret பனிச்சறுக்கு மையத்திற்கு அருகில் உள்ள Hotel de Tredós என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலை வாங்கியுள்ளது. இந்த ஹோட்டல் 39 அறைகளை கொண்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கூடுதல் நிலமும்
நவம்பர் 24-ஆம் திகதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹோட்டலுடன் இணைந்துள்ள கிராமப்புற நிலப்பகுதியும் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிவர்த்தனைக்கான மதிப்பு எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.
வால் டி அரான் பகுதியில் 3-வது ஹோட்டல்
இந்த ஹோட்டல் வாங்குதல் மூலம், ஸ்பெயினின் Val d'Aran பள்ளத்தாக்கு பகுதியில் மெஸ்சியின் மூன்றாவது ஹோட்டலாக இது மாறியுள்ளது. இதற்கு முன்னர் அவர் MiM Baqueira மற்றும் Hotel SNÖ Colomers ஆகிய ஹோட்டல்களையும் வாங்கியிருந்தார்.
சுற்றுலா துறையில் அதிகரிக்கும் முதலீடு
பனிச்சறுக்கு சுற்றுலாவை மையமாகக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மெஸ்சி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். தற்போது வாங்கப்பட்டுள்ள Hotel de Tredós-ல் உணவகம், வெளிப்புற நீச்சல் குளம் மற்றும் ஸ்கீ விளையாட்டு பயணிகளுக்கான பல வசதிகள் உள்ளன.
எட்டு ஹோட்டல்களின் உரிமையாளர்
இந்த புதிய முதலீடு மூலம் மெஸ்ஸியின் ஹோட்டல் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. அவரது MiM ஹோட்டல் சங்கிலி தற்போது Sitges, Mallorca, Ibiza, Sotogrande மற்றும் Andorra உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் பாதி ஹோட்டல்கள் கட்டலோனியா பகுதியில் அமைந்துள்ளன.
வணிக உலகிலும் மெஸ்ஸியின் வளர்ச்சி
2025-ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட Edificio Rostower நிறுவனத்தின் மதிப்பு சுமார் 223 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹோட்டல்களைத் தவிர, பார்சிலோனாவில் வணிக கட்டிடங்கள், சொகுசு வீடுகள், லண்டன் மற்றும் பாரிஸில் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளும் இந்த நிறுவனத்திடம் உள்ளன.
கால்பந்தை தாண்டி வெற்றி
39 வயதான மெஸ்ஸி, தற்போது அமெரிக்காவின் Inter Miami அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்தில் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் தனது செல்வாக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த புதிய முதலீட்டின் மூலம் தெளிவாகிறது.