கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு
Canada Names Goldy Brar Most Wanted Fugitive: கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடத்தில் கோல்டி பிரார் பெயர் உள்ளது.
கனடாவில் தேடப்பட்டுவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவுடி கும்பல் தலைவரான (gangster) கோல்டி பிரார் (Goldy Brar) குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.5 லட்சம் கனேடிய டொலர் வரை பரிசு
அவரை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 2.5 லட்சம் கனேடிய டொலர் (சுமார் ரூ.1.63 கோடி) வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் 25 மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

கோல்டி பிராரின் இயற்பெயர் சதிந்தர்ஜீத் சிங் (Satinderjeet Singh) ஆகும். அவர் 2023-ஆம் ஆண்டு கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார். 39 வயதான சுக்தூல் சிங் கில் என்பவர் செப்டம்பர் 2023-இல் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பை BOLO Program என்ற கனடாவின் பொது பாதுகாப்புத் திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு, பொலிசாருக்கு உதவி செய்து தப்பியோடிய குற்றவாளிகளை கண்டறிவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. கோல்டி பிராரை கைது செய்ய வழிவகுக்கும் நம்பகமான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு BOLO கேட்டுக்கொண்டுள்ளது.
வின்னிபெக் பொலிசின் தகவல்படி, 2026 பிப்ரவரி மாதத்தில் கோல்டி பிரார் மற்றும் கரன்பீர் சிங் ஆகியோருக்கு எதிராக முதல் தர கொலை மற்றும் கொலை சதித் திட்ட வழக்குகளில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இருவரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் Most Wanted பட்டியலில் கோல்டி பிரார்
இதற்கிடையில், அமெரிக்காவின் FBI அமைப்பும் கோல்டி பிராரை தனது“Ten Most Wanted Fugitives” பட்டியலில் சேர்த்துள்ளது. அவரை கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
FBI வெளியிட்ட தகவலின்படி, கோல்டி பிரார் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள் அவரை கைது செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் கோல்டி பிராருக்கு எதிரான சர்வதேச வேட்டை மேலும் தீவிரமடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |