மியான்மரால் இனப்படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கியா மக்கள் - சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு
ICJ Rules Myanmar Guilty of Rohingya Genocide: ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் செய்தது இனப்படுகொலை தான் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரோஹிங்கியா இனப்படுகொலை - வரலாற்றுத் தீர்ப்பு
மியான்மர் அரசும் அதன் ராணுவமும் ரோஹிங்கியா சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, உலகின் உயர்ந்த நீதிமன்றம் ஒரு அரசை நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பாக்கிய முதல் தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு மியான்மர் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, 7 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.
அப்போது பொதுமக்கள் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் கிராமங்கள் எரிக்கப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், 15 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் மியான்மர் ரோஹிங்கியா மக்களின் குறிப்பிடத்தக்க பகுதியை அழிக்கத் திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்பட்டதாக முடிவு செய்தனர். இதன் அடிப்படையில், மியான்மர் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கை ஆப்பிரிக்க நாடான காம்பியா முன்வைத்தது. ரோகிங்யா மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் அவர்களின் சமூகத்தை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்கள் ஆகியவை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.

அகதி முகாம்களில் ரோஹிங்கியா மக்கள் மகிழ்ச்சி
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், வங்கதேச அகதி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தங்களது துயரங்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், நீதிக்கான போராட்டத்தில் இது முக்கிய வெற்றி என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ரோஹிங்கியா மக்களை தனித்துவமான இனக்குழுவாக சர்வதேச சட்டம் அங்கீகரித்திருப்பதும் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
ரோகிங்யா மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றம், இழந்த சொத்துகளுக்கான இழப்பீடு மற்றும் உடல், மனநல மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள மியான்மருக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்த தீர்ப்பு உலகளவில் இனப்படுகொலை வழக்குகளுக்கான முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான போராட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |