கனடாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இந்திய இளம்பெண்: மேலும் ஒரு ஏமாற்றம்
புலம்பெயர்தல் ஏஜண்டை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பியதால், கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளார்.
பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய ஏஜண்ட்
இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்த கரம்ஜீத் கௌர் (Karamjeet Kaur, 25) சிறுவயதில் விபத்தொன்றில் சிக்கியதால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிக்கப்பட, அவரது வலது கையும், வலது காலும் செயலிழந்துவிட்டன.
எங்கு சென்றாலும் தன்னை ஒரு வேடிக்கைப் பொருளாக மற்றவர்கள் பார்ப்பது கரம்ஜீத்துக்குப் பிடிக்கவில்லை. பெண் என்றாலே பாரபட்சம் காட்டுவார்கள், அதுவும் உடற்குறைபாடு வேறு இருப்பதால் தன்னை மக்கள் மோசமாக நடத்தியதாக தெரிவிக்கும் அவர், இந்தியாவில் தனக்கு ஒரு நல்ல வேலையோ, கணவரோ கிடைப்பது கடினம் என தீர்மானித்து வெளிநாடு ஒன்றிற்கு சென்று விடுவது என முடிவு செய்துள்ளார்.
image -Rick Bremness/CBC
அதிகம் படிக்காத அவரது பெற்றோர் புலம்பெயர்தல் ஏஜண்ட் ஒருவரின் உதவியை நாட, பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஏஜண்ட், மூன்று நாட்களுக்குப் பின் ரொரன்றோவிலுள்ள Seneca கல்லூரியில் கரம்ஜீத் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த கல்லூரி வழங்கியுள்ள அங்கீகாரக் கடிதம் ஒன்றையும் அவரிடம் கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அந்தக் கடிதத்துடன் கரம்ஜீத் கனடா வந்தடைய, எல்லை அதிகாரிகள் அந்தக் கடிதத்தை அங்கீகரிக்க, அவருக்கு கல்வி உரிமம் கிடைத்துள்ளது.
கரம்ஜீத் கனடா வந்ததும் அந்த புலம்பெயர்தல் ஏஜண்ட் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். தனக்கும் Seneca கல்லூரிக்கும் உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், வேறொரு கல்லூரியில் சேருமாறும் கூற, கரம்ஜீத் எட்மண்டனில் உள்ள Norquest கல்லூரியில் இணைந்துள்ளார்.
திடீரென தலைதூக்கிய பிரச்சினை
2020இல், வர்த்தக நிர்வாக மேலாண்மையில் பட்டயப்படிப்பை முடிப்பது வரை எல்லாமே சுமூகத்தான் சென்றிருக்கின்றன. ஆனால், அதற்குப் பின் கரம்ஜீத் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க, அப்போதுதான் பிரச்சினை துவங்கியுள்ளது.
2021ஆம் ஆண்டு, மே மாதம் 25ஆம் திகதி அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அவருக்குக் கிடைத்துள்ளது. ஆம், கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அலுவலர் ஒருவர், கரம்ஜீத் அளித்த Seneca கல்லூரி அங்கீகாரக் கடிதம் போலியானது என தெரிவித்துள்ளார்.
image - Nathan Gross/CBc
அதிர்ந்து போன கரம்ஜீத், தான் புலம்பெயர்தல் ஏஜண்டால் ஏமாற்றப்பட்ட விடயத்தை புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்தின் முன் தெரிவித்துள்ளார். ஆனால், ஆணையம் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுவிட்டது. ஒரு புலம்பெயர்தல் ஏஜண்டை மட்டுமே சார்ந்திருக்காமல் தனது அங்கீகாரக் கடிதம் உண்மையானதுதானா என்பதை கரம்ஜீத் கல்லூரியிடம் கேட்டு உறுதி செய்திருக்கவேண்டும் என கூறிவிட்டார் முடிவெடுக்கும் அதிகாரி ஒருவர்.
கனடாவை விட்டு வெளியேறிய பிறகு கரம்ஜீத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் கனடாவுக்குத் திரும்பவும் முடியாது.
அதைத் தொடர்ந்து, கரம்ஜீத் தின் சட்டத்தரணியான Manraj Sidhu நீதித்துறை மறு ஆய்வு கோரினார்.
ஆனால், பெடரல் நீதிமன்ற நீதிபதியான Ann Marie McDonald, புலம்பெயர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமானதே என்று கூறி நீதித்துறை மறு ஆய்வை ரத்துசெய்துவிட்டார்.
அத்துடன், கரம்ஜீத் ஏமாற்றப்பட்டது உண்மைதான் என்றாலும், அது அவர் அளித்துள்ள தவறான தகவல்களால் உருவாகியுள்ள பின்விளைவுகளிலிருந்து அவரை விடுவிக்காது. கணினி அறிவியல் பயின்ற ஒரு மாணவி, தான் கல்வி கற்கப்போகும் கல்லூரி உண்மையானதுதானா என்பதை தான்தான் விசாரித்து அறிந்திருக்கவேண்டும் என்றும் கூறிவிட்டார் நீதிபதி.
image - Nathan Gross/CBc
இதற்கிடையில், தனது அங்கீகாரக் கடிதம் போலியானது எனத் தெரியவந்ததும், இந்தியாவிலிருக்கும் தனது பெற்றோருக்கு கரம்ஜீத் தகவல் கொடுக்க, அவர்கள் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் அந்த ஏஜண்டை கைது செய்துள்ளார்கள். ஜாமீனில் வந்த அவர் தன் குடும்பத்தை மிரட்டுவதாக தெரிவித்துள்ள Karamjeet, தான் இந்தியா திரும்பினால் தன்னை அவரிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்கிறார்.
இந்நிலையில், கருணை மற்றும் மனிதநேய அடிப்படையில் கனடாவில் வாழ கரம்ஜீத்துக்கு அனுமதியளிக்கக்கோரி விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளார் அவரது சட்டத்தரணியான Sidhu. அதற்கான பதில் கிடைக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகும் என்பதால், தற்போது காத்திருப்பதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.