கிரீன்லாந்திற்கு துருப்புகளை அனுப்பும் கனடா: நேட்டோ உடன் கூட்டு ராணுவ பயிற்சிக்கு திட்டம்
கிரீன்லாந்திற்கு கனேடிய துருப்புகளை அனுப்புவது குறித்து அந்நாட்டு பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரமடையும் கிரீன்லாந்து விவகாரம்
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை சொந்தமாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கிரீன்லாந்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம் பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கி தங்கள் துருப்புகளை அப்பகுதியில் நிலைநிறுத்தி வைத்துள்ளன.
துருப்புகளை அனுப்பும் கனடா
இந்நிலையில் கிரீன்லாந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு தங்கள் நாட்டின் தரைப்படை வீரர்களை அனுப்புவது தொடர்பாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தீவிரமாக ஆலோசித்து வருவதாக CBC தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கனடா தங்களது ராயல் கனேடியன் விமானப்படையின் குழு நேட்டோ பயிற்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில் கனடா தன்னுடைய பங்களிப்பை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவுடனான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை விரிசலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்பதால் கனடா அரசு துருப்புகளை அனுப்புவது தொடர்பாக இன்னும் உறுதியாக முடிவு எடுக்கவில்லை.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கம் ஆகியவற்றை கனேடிய அரசு அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |