இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு
Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
போலி லேபிள் உணவுப் பொருட்கள்
மும்பையில் நடந்த உணவுப் பொருள் சோதனையில், போலியான ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் காலாவதி திகதிகள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது இறக்குமதி அபாயங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடத்திய சோதனையில், PepsiCo, Nestlé, Coca-Cola, Unilever போன்ற நிறுவனங்களின் பொருட்கள், போலி லேபிள்களுடன் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன.
சுமார் 80,000 டொலர் மதிப்புள்ள பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கனடாவிற்கு ஏற்றுமதி?
இந்த போலி லேபிள்களில், கனடாவில் பயன்படுத்தப்படும் இருமொழி (ஆங்கிலம்-பிரெஞ்சு) ஊட்டச்சத்து தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இது, பொருட்கள் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கனடாவின் Food Inspection Agency (CFIA), “இந்த சம்பவம் கனடா இறக்குமதிக்கு அபாயம் ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுவரை, இந்த போலி பொருட்கள் கனடாவுக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளது.
மேலும், “போலி திகதிகள், தவறான ஊட்டச்சத்து தகவல்கள், தவறான மூல நாடு குறிப்பு போன்ற உணவு மோசடிகளை மிகக் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும்” என்பதையும் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை, இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல இடங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
PepsiCo நிறுவனம், “இந்த ஏற்றுமதி நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த வணிகத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் எங்கள் பொருட்கள், இந்திய சந்தைக்காக மட்டுமே” என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம், உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |