ட்ரம்பின் வரி யுத்தம்... கனடா அளித்த பதிலடி
கனடா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போருக்கு தகுந்த பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதே அளவுக்கான வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
எதிர்கொள்ள கனடா தயார்
இதனால், 155 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா மீது கனேடிய நிர்வாகம் படிப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு முடிவு தேவையற்றது என குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, ஆனால் ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்கொள்ள கனடா தயாராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் கனடா வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி தெரிவிக்கையில்,
அமெரிக்கா விதித்துள்ள இந்த வரிகள் நமது வர்த்தக ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கையாகும், மேலும் நமது வரலாற்றில் மிகவும் கடுமையான வர்த்தக மற்றும் பொருளாதார பதிலடியை இது கோருகிறது என்றார்.
மட்டுமின்றி, கனடா ஒருபோதும் ஒரு கொடுமைக்காரனுக்கு அடிபணியாது எனவும் அவர் பதிவு செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில்,
பாதுகாக்க வேண்டியது கடமை
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரியும் கனடாவின் எரிசக்திக்கு 10 சதவிகித வரியும் சீனா மீது கூடுதலாக 10 சதவிகித வரியும் விதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது, குறிப்பிட்ட நாடுகளின் இருந்து இறக்குமதி செய்யப்படும் அபாயகரமான போதை மருந்துகளால் அமெரிக்க மக்கள் பலியாவதை தடுக்கும் முயற்சி என்றார். அமெரிக்க மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்,
தேர்தல் பரப்புரையின் போது தாம் அளித்த உறுதி இதுவென்றும், சட்டவிரோதமாக நமது எல்லையூடாக கொண்டுவரப்படும் அனைத்து போதை மருந்தும் மொத்தமாக தடுத்து ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தாம் நிறைவேற்ற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |