சிக்கலில் தண்ணீர் ஒப்பந்தம்... கடும் நெருக்கடியில் ஐரோப்பிய நாடொன்றின் வேளாண் மக்கள்
அண்டை நாடான பல்கேரியாவுடனான தண்ணீர் ஒப்பந்தம் முடிவுக்கும் வந்துள்ள நிலையில் கிரேக்க வேளாண் மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகள் முற்றுகை
இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் உலகப் போரின் இழப்பீட்டு ஒப்பந்தத்தின் கீழ் 1964 முதல், பல்கேரியாவின் மலைகளிலிருந்து வரும் நீர் அர்தா நதியின் குறுக்கே கிரேக்கத்தில் உள்ள எவ்ரோஸ் சமவெளியின் 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் காலாவதியானது, பல்கேரியா தனது சொந்த தேவைகளை மதிப்பிடுவதால் அந்த ஒப்பந்தமானது புதுப்பிக்கப்படுமா என்பது கேள்விக்குறியா மாறியுள்ளது.
இந்த நிலையில், கோடைகாலத்திற்கு முன்னதாக ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் விரைவாகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி, கிரேக்க விவசாயிகள் இந்த வாரம் வடக்கு நகரமான கஸ்தானீஸை முற்றுகையிட்டனர்.
ஆனால் பல்கேரியாவில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அடுத்தடுத்த இடைக்கால அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முடக்கியுள்ளதாக கிரேக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, பல்கேரியாவின் விவசாய அமைச்சகம் அறிக்கை ஒன்றில், பல்கேரியா முதலில் அதன் சொந்த தேசிய நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம். அதன் பிறகு அண்டை நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் முடிவெடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.
கடைசி நிமிட ஒப்பந்தம்
முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், பல்கேரியா நீர்மின்சார அணைகளில் இருந்து ஆண்டுக்கு 186 மில்லியன் கன மீற்றர் தண்ணீரை, நீர்த்தேக்கங்கள் அல்லது அணைகள் எதுவும் செயல்படாத பின்தங்கிய பகுதியான எவ்ரோஸுக்கு விநியோகித்து வந்துள்ளது.
வேளாண் நிலங்களுக்கு மிகவும் தேவைப்படும் மே முதல் செப்டம்பர் வரை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமானது ஜூலை மாதத்துடன் முடிவடைந்த போதிலும், கிரேக்கமும் பல்கேரியாவின் தேசிய மின்சார நிறுவனமும் செப்டம்பர் வரையிலான விநியோகங்களுக்கான கடைசி நிமிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அதன் விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பல்கேரியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளதால், அடுத்த மாதம் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என கிரேக்க நிர்வாகம் நம்புகிறது, ஆனால் மே 1 ஆம் திகதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |