ட்ரம்ப் வரி விதிப்பால் கனேடிய குடும்பங்களூக்கு பொருளாதார நெருக்கடி... விரிவான பின்னணி
வரி விதிப்பில் இருந்து கனடா தப்பிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சலுகை அளிக்க வாய்ப்பில்லை
வெள்ளிக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, சீனா அல்லது மெக்சிகோ ஆகிய நாடுகள் வரிகளைத் தடுக்க இனிமேல் எதுவும் செய்ய வாய்ப்பில்லை என்றார்.
இந்த மூன்று நாடுகளுக்கும் சலுகைகளும் அளிக்க வாய்ப்பில்லை என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கையில்,
மிக அதிக அளவிலான ஃபெண்டானில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைகிறது என்பதை மறுக்க முடியாது என்றும், இதுவே அந்த நாட்டின் மீது வரி விதிப்புக்கு முதன்மையான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஃபெண்டானிலுக்கு மெக்சிகோ மீது 25 சதவீத வரியும், கனடா மீது 25 சதவீத வரியும், சீனாவிடம் இருந்து 10 சதவீத வரியும் சனிக்கிழமை முதல் ஜனாதிபதி அமுல்படுத்தவுள்ளார்.
இந்த மூன்று நாடுகளும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்புக்கு காரணமாகியுள்ளது என்றார். இதனிடையே, கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தகப் பற்றாக்குறையே வரிகளை அமுல்படுத்துவதற்கான ஒரு காரணம் என்ற தனது கருத்தையும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் 2024ல் கனடாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 45 பில்லியன் டொலர் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் குறிப்பிடும் 200 பில்லியன் டொலர் கணக்கு என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் கனடா தரப்பில் கூறப்படுகிறது.
சராசரியாக 1,900 டொலர்
முன்னதாக தாம் ஆட்சிக்கு வரும் முதல் நாளில் இருந்தே கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பிப்ரவரி 1ம் திகதி முதல் வரி விதிப்பு அமுலுக்கு வருகிறது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிப்ரவரி 18 முதல் கனடா எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான வரிகளை உயர்த்த இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் கனடாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணைய்க்கு 10 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும். அக்டோபர் 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் நாளுக்கு 4.3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கனேடிய வர்த்தக சபையின் பகுப்பாய்வின்படி, ட்ரம்பின் 25 சதவிகித வரி விதிப்பால் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2.6 சதவீதம் குறைத்து, கனேடிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1,900 டொலர் இழப்பை ஏற்படுத்தும்.
ஆனால் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதம் சரிவடைந்து, அங்குள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1,300 டொலர் இழப்பை ஏற்படுத்தும்.
மட்டுமின்றி வேலை இழப்பு, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி என கடுமையான சூழலை மக்கள் எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்றே கனேடிய வர்த்தக சபை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |