கடும் நெருக்கடி... உக்ரைனில் இருந்து பின்வாங்கும் வடகொரிய இராணுவம்
குர்ஸ்க் போர்முனையில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போராடும் வட கொரிய வீரர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்த நிலையில் தற்போது பின்வாங்கியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் சண்டையிடும் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவாக வட கொரியா 10,000க்கும் மேற்பட்ட வீரர்களை களமிறக்கியுள்ளதாக மேற்கத்திய நாடுகள், தென் கொரிய மற்றும் உக்ரைனிய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா மீது ஒரு அதிரடி எல்லை தாண்டிய தாக்குதலை உக்ரைன் தொடங்கியது. இந்தத் தாக்குதலை அடுத்து ரஷ்யாவின் டசின் கணக்கான குடியிருப்பு பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்ய நிலப்பரப்பில் ஒரு நாட்டின் இராணுவம் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இது விளாடிமிர் புடின் நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியை அளித்த பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் புடின் அல்லது அவரது அரசாங்கம் தரப்பில் இருந்து எந்த கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதியில் களமிறக்கப்பட்டுள்ள வட கொரிய இராணுவம் தொடர்பில் ரஷ்யாவும் வடகொரியாவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
3 வாரங்களாக
ரஷ்யாவின் இராணுவத்தை வலுப்படுத்தவும், உக்ரைனின் துருப்புக்களுக்கு கடும் நெருக்கடி அளிக்கவும் வடகொரிய படைகள் உதவும் என்று கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும், உக்ரைன் இன்னும் ரஷ்ய பிரதேசத்தின் பெரும்பகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இது பின்னாளில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு பயன்படும் என்றே உக்ரைன் நம்புகிறது. இந்த நிலையில், கடந்த 3 வாரங்களாக வடகொரிய இராணுவத்தினரின் நடமாட்டம் அல்லது போர்முனையில் சண்டையிடுவது என அவர்கள் தென்படவில்லை என்றே உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பின்னடைவால் அவர்கள் பின்வாங்கியிருக்கலாம் என நம்புவதாக கூறியுள்ளனர். மேலும், வடகொரிய வீரர்கள் பலர் மொதலின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் உக்ரைன் படைகளிடன் உயிருடன் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் ரஷ்யா தரப்பில் இருந்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |