அண்டார்டிகாவில் 100 மைல் ஓட்டம்; உலக சாதனை படைத்த கனேடிய பெண்
canada runner stephanie case become first women complete antarctic race: அண்டார்டிகாவில் 100 மைல் ஓட்ட பந்தயத்தை நிறைவு செய்த உலகின் முதல் பெண் என்ற சாதனையை கனடாவின் ஸ்டெஃபனி கேஸ் படைத்துள்ளார்.
அண்டார்டிகாவில் 100 மைல் ஓட்ட பந்தயம்
அண்டார்டிகா என்பது முழுவதும் பனியால் சூழப்பட்ட மனிதர்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக உள்ளது. மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் நிலவும் பகுதி என்பதால், ஆய்வாளர்கள் ஆய்வுக்காக அங்கு வருகை தருகின்றனர்.

ஆனால், இங்கு முதல் பெண்ணாக கனடாவை சேர்ந்த அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையான ஸ்டெஃபனி கேஸ் (stephanie case), 100 மைல் ஓட்ட பந்தயத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள குயின் மௌட் லேண்டில் இருக்கும் ஷிர்மாக்கர் பாலைவனச் சோலையில் இந்தப் பந்தயம் நடைபெற்றது.
மைனஸ் 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவிய அந்த பகுதியில், 4.2 கிலோமீட்டர் தூரமுள்ள பந்தயப் பாதையில் 38 சுற்றுகளை முடிக்க வேண்டியிருந்தது.
உலகில் வெகு சிலரே இங்கு பந்தயத்திற்கு முயற்சிக்கின்றனர். இந்த முறை 8 பேர் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் 4 பேரால் மட்டுமே அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.
வழக்கமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த பந்தயத்தில் முதல்முறையாக 3 பெண்கள் கலந்து கொண்டனர். இதில், கனடாவை சேர்ந்த ஸ்டெஃபனி கேஸ் மட்டுமே போட்டியை நிறைவு செய்தார்.
சவாலான இந்த அண்டார்டிக் ஐஸ் அல்ட்ரா பந்தயத்தை 17 மணி நேரம், 31 நிமிடங்கள் மற்றும் 39 வினாடிகளில் முடித்து, ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்டெஃபனி கேஸ், இந்த பந்தயத்தை நிறைவு செய்த உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
ஸ்டெஃபனி கேஸ் பெருமிதம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டெஃபனி கேஸ், "உயிரியல் பாதுகாப்பு காரணங்களுக்காக, அண்டார்டிகாவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்ல முடியாது.
மேலும், பல அடுக்குகளாக ஆடை அணிந்திருக்கும்போது கழிவறைக்குச் செல்வதும், 5 வினாடிகளுக்குக் கையுறைகளைக் கழற்றினால்கூட கைகளில் பனிக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதும் ஒரு உண்மையான சவாலாக இருந்தது.
நான் உண்மையில் அதைச் செய்து முடித்துவிட்டேன், அதுவும் நான் மிகவும் பெருமைப்படும்படியான ஒரு நேரத்தில் செய்து முடித்தேன் என்ற நிம்மதிதான், நான் இலக்குக் கோட்டைக் கடந்தபோது ஏற்பட்டது.

வரலாற்று ரீதியாக "பெண்கள் இல்லாத கண்டம்" என்று வர்ணிக்கப்படும் ஒரு இடத்தில் இதைச் செய்வது ஒரு பொருத்தமான சாதனை" என தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவின் கிங்ஸ்டனில் வளர்ந்த ஸ்டெஃபனி கேஸ், ஓட்டப்பந்தய வீராங்கனை மட்டுமல்லாமல். ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞர் மற்றும் 'Free to Run ' என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார்.
மேலும், ஏற்கனவே 500 க்கும் மேற்பட்ட அல்ட்ரா மாரத்தான்களை நிறைவு செய்துள்ளார்.