கனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிப்பு: 13 வயது சிறுவன் கைது
கனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மீது தாக்குதல் நடத்த திட்டம்
கனடாவின் ஒன்டாரியோ(Ontario) தண்டர் பே(Thunder Bay) பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், இணையதளம் வழியாக சதித்திட்டம் போட்டு பாடசாலை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதை அடுத்து, அவர் மீது கடுமையான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பான விசாரணை அக்டோபர் 6ம் திகதி தொடங்கிய நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன் வேறு நாட்டில் இருக்கும் நபர் ஒருவரிடம் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு பாடசாலை மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்த தாக்குதல் சமீபத்தில் அரங்கேறி இருக்கலாம் என்று பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் தொடர்பான இணைய அச்சுறுத்தல்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் Thunder Bay வெறுப்பு குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
ஒன்றிணைந்த சர்வதேச அமைப்புகள்
சதித்திட்டத்தின் தீவிர தன்மை காரணமாக இந்த விசாரணையில் FBI, Interpol மற்றும் RCMP அமைப்புகளின் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 14ம் திகதி Thunder Bay பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் 13 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
சிறுவன் மீது கொலை செய்ய சதி செய்தல், குற்றத்தை செய்ய ஆலோசனை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |