கோதுமை ஏற்றுமதியில் உலகின் 2-வது பெரிய நாடாக கனடா உருவாகும் - புதிய அறிக்கை தகவல்
Canada Set to Be 2nd Largest Wheat Exporter: கோதுமை ஏற்றுமதியில் உலகின் 2-வது பெரிய நாடாக கனடா உருவாகும் என புதிய அறிக்கை கூறுகிறது.
உலகின் 2வது பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாக உருவாகும் கனடா
கடினமான காலநிலை சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ள கனடா, 2026-27 சந்தைப்படுத்தல் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாக உருவாகும் என்று Cereals Canada அமைப்பு வெளியிட்டுள்ள புதிய New Wheat Crop Report அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, கனடாவின் 2026 கோதுமை உற்பத்தி 36.1 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரியை விட 8 சதவீதம் அதிகமாகும்.

அதிக புரதச்சத்து கொண்ட கோதுமை ஏற்றுமதியில் முதலாவது நாடு
நாட்டின் பல பகுதிகளில் சாதகமான வானிலை நிலவியதால், கோதுமையின் தரமும் விளைச்சலும் சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Dean Dias, "இந்த பருவத்தில் விவசாயிகள் பல சவால்களை சந்தித்தாலும், முழு மதிப்புச் சங்கிலியும் இணைந்து தரமான விளைச்சலை உறுதி செய்துள்ளது. கனடா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாகவும், உயர்தர மற்றும் அதிக புரதச்சத்து கொண்ட கோதுமை ஏற்றுமதியில் முதல் நாடாகவும் இருக்கும் பாதையில் உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், 2026-27 காலகட்டத்தில் கனடா சுமார் 28.8 மில்லியன் டன் கோதுமையை உலகின் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அறிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களின்படி, கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான கோதுமைகள் No.1 அல்லது No.2 தரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக Canada Western Red Spring (CWRS) மற்றும் Canada Western Amber Durum (CWAD) வகை கோதுமைகள் உயர்ந்த புரதச்சத்து மற்றும் சிறந்த செயல்திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல், கிழக்கு கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட Canada Eastern Soft Red Winter (CESRW) கோதுமையின் 97 சதவீத பயிர்களும் No.2 அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தை பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான புதிய அறுவடை மதிப்பீடுகளை உலக சந்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், Cereals Canada குழு 15 முக்கிய சந்தைகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்த உள்ளது. இந்த சந்தைகள் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 7.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனேடிய கோதுமையை இறக்குமதி செய்து வருகின்றன.
உலகளவில் கோதுமை தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயர்தர உற்பத்தி மற்றும் வலுவான ஏற்றுமதி திறன் காரணமாக கனடா தனது முன்னணி இடத்தை மேலும் வலுப்படுத்தி வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |