‘காளி’ ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: மன்னிப்பு கோரிய கனடா அருங்காட்சியகம்
‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் மீது பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், கனடா அருங்காட்சியகம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் நடைபெற்ற திருவிழாவில் சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலையின் 'காளி' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இந்துக்கடவுள்களை லீனா மணிமேகலை இழிவுபடுத்திவிட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த போஸ்டர் தொடர்பில், லீனா மீது மத உணர்வாளர்களை புண்படுத்தியதாக இந்தியாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'காளி' பட போஸ்டர் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், டொராண்டோவை தளமாகக் கொண்ட ஆகா கான் அருங்காட்சியகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சமூகத்தால் இந்து மற்றும் பிற மத சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு வருந்துகிறோம் என்று மன்னிப்பு கோரியது.
இந்திய இளம்பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! சுவாரசிய தகவல்
இது குறித்து அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரொறொன்ரோ பெருநகரப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "Under the Tent" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு இன மற்றும் கலாச்சார பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகளை இந்த அருங்காட்சியகம் தொகுத்து வழங்கியது.
"அண்டர் தி டெண்டில்' இருந்து 18 சிறு வீடியோக்களில் ஒன்று மற்றும் அதனுடன் இணைந்த சமூக ஊடக இடுகைகள் கவனக்குறைவாக இந்து மற்றும் பிற மத சமூகங்களைச் சேர்ந்தவர்களை புண்படுத்தியதற்கு அருங்காட்சியகம் மிகவும் வருந்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் திட்ட விளக்கக்காட்சி அகா கான் அருங்காட்சியகத்தில் கலைகளின் மூலம் கலாச்சார புரிதல் மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கான அருங்காட்சியகத்தின் நோக்கத்தின் பின்னணியில் நடத்தப்பட்டது. பல்வேறு மத வெளிப்பாடுகள் மற்றும் நம்பிக்கை சமூகங்களுக்கு மரியாதை செலுத்துவது அந்த பணியின் ஒருங்கிணைந்த பகுதியாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் திங்களன்று கனேடிய அதிகாரிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் "இதுபோன்ற அனைத்து ஆத்திரமூட்டும் பொருட்களையும்" திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியது.
உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் 'அண்டர் தி டெண்ட்' திட்டத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு படத்தின் போஸ்டரில் இந்துக் கடவுள்களை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.