கனடா பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட அரசியல்வாதிக்கு திடீர் பின்னடைவு: காரணம் என்ன?
அடுத்து நாட்டின் தலைவராவார்கள் என எதிர்பார்க்கப்படும் அரசியல்வாதிகளைக் கூட, ஒரு கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் பிடிக்காத்தால் கைவிட்டுவிடுகிறார்கள் மக்கள்.
ஜேர்மனியில் பெரிய கட்சியாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட கட்சி ஒன்று, கடந்த தேர்தலில் ஒரு இருக்கையைக் கூட வெல்லவில்லை.
அதன் தலைவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்தே விலகியதுடன், அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டார். காரணம், அக்கட்சியின் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை!
அதேபோன்றதொரு நிலை கனேடிய அரசியல்வாதி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட அரசியல்வாதி
கடந்த ஆண்டில், கனடாவின் பிரதமராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரான பியர் பாலியவ்ர்.

ஆனால், தற்போது அவருக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
சமீபத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகி, பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சியில் இணைந்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்றொரு அரசியல்வாதி கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிடுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
என்ன காரணம்?
பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட பியர், இப்படி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதிக்க என்ன காரணம்?
பியர், ட்ரம்பின் அதிரடிக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளே, அவரது சொந்தக் கட்சியினரே அவரைக் கைவிடக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது, அகா கான் (Aga Khan) என்பவரிடம் அவர் பரிசுகள் பெற்றுக்கொண்டு அவரது கட்டுமான நிறுவனத்துக்கு முறையற்ற வகையில் உதவியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. பின்னர் ட்ரூடோ தன் தவற்றை ஒப்புக்கொண்டார்.
அந்த விடயம் தொடர்பில் ட்ரூடோவை சிறையிலடைக்கவேண்டும் என கூறியுள்ளார் பியர். அத்துடன், ட்ரூடோவின் தவறை மறைக்க பொலிசார் உதவியதாகவும் கூறியதுடன் பொலிஸ் பொலிஸ் தலைமையையும் கடுமையாக விமர்சித்திருந்தார் பியர்.
பியரின் இந்த செயல் கனேடிய அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை என்கிறார் அரசியல் நிபுணரான ரொரன்றோ பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் (Christopher Cochrane).
இதேபோல, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் க்ளிண்டனுடைய மனைவியான ஹிலாரி கிளிண்டனை சிறையிலடைக்கவேண்டும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், இதுபோன்ற அமெரிக்கத்தனமான பேச்சு கனடாவுக்கு ஒத்துவராது என்கிறார் அவர்.
ஆக, ட்ரம்பைப் போல புலம்பெயர்தல் விடயத்தில் வெறுப்பைக் காட்டுதல், ட்ரம்ப் போன்ற பேச்சு போன்ற விடயங்களை பியர் பின்பற்றுவதே அவரது பின்னடைவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |