100-க்கும் மேற்பட்டோருக்கு விஷத்தை விற்ற நபர்., உயிரை மாய்த்துக்கொள்ள உதவியதாக வாக்குமூலம்
உலகம் முழுவதும் பல நாடுகளில், நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்ள ஒருவர் உதவியாக இருந்துள்ளார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கென்னத் லா (Kenneth Law) எனும் 60 வயதான நபர், இணையதளங்கள் மூலம் விஷப்பொருட்கள் மற்றும் தற்கொலைக்கான வழிமுறைகளை விற்றுள்ளார்.
இதன்மூலம், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமானதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒன்ராறியோ நீதிமன்றத்தில், அவர் 14 பேரின் மரணத்திற்கு நேரடியாக உதவியதாக குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

முதலில் அவர்மீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அவை நீக்கப்பட்டு “தற்கொலைக்கு உதவுதல்” என்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என ஒப்புக்கொண்டார்.
அவரது இணையதளங்கள் மூலம் 41 நாடுகளில் 1,200-க்கும் மேற்பட்ட பொக்கெட்டுகள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக பிரித்தானியாவில் 79 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர், உணவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் போலியான வணிக முகவரிகளை பயன்படுத்தி, விஷப்பொருட்களை “சில்வர் பொக்கெட்” வடிவில் அனுப்பியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்த நிலையில், கனடா மற்றும் பிரித்தானியாவில் பொதுமக்கள் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் Law அனுப்பிய விஷப்பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்ததை நீதிமன்றத்தில் உணர்ச்சியுடன் விவரித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இத்தகைய தற்கொலை ஊக்குவிக்கும் இணையதளங்களை அரசுகள் உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Kenneth Law-க்கு எதிரான தண்டனை செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |