இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே ட்ரக்கை மோதிய கனேடியர்: கனடாவை அதிரவைத்துள்ள ஒரு சம்பவம்
புலம்பெயர்ந்தோர் குடும்பம் ஒன்றின்மீது வேண்டுமென்றே ட்ரக் ஒன்றை மோதி, அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறையினரைக் கொலை செய்துள்ளார் கனேடியர் ஒருவர்.
கனடாவை அதிரச் செய்துள்ள இந்த சம்பவம் ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் நடந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில், ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 74 வயது பாட்டி, 46 வயது கணவர், 44 வயது மனைவி, அவர்களது மகளான 15 வயது பெண் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அந்த தம்பதியரின் மகனான 9 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
முழுக்க முழுக்க அந்த குடும்பம் இஸ்லாமிய குடும்பம் என்பதாலேயே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெயர் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அந்த குடும்பத்தினர் 14 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து கனடா வந்துள்ளனர். அவர்கள் மீது ட்ரக் ஒன்றைக் கொண்டு மோதிய Nathaniel Veltman (20) என்னும் கனேடியர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, லண்டனில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் கனடா முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், இஸ்லாமிய வெறுப்புக்கு நமது நாட்டில் இடம் கிடையாது.
கண்ணுக்குத் தெரியாமல் மெதுவாக பரவும் இந்த வெறுப்பு மோசமானது, இது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.