தவறான செய்தி... தென்னாப்பிரிக்காவில் கொல்லப்பட்ட கனேடியர் குறித்து நண்பர் தெரிவித்துள்ள திடுக் தகவல்
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த கனேடியர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அசாதாரண விபத்தில் கனேடியர் உயிரிழந்ததாக வெளியான செய்தி
69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலாத்தலத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு, வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருக்க, இந்த கனேடியர் அவரிடம் சென்று, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்று கேட்டதாகவும், அந்த வழிகாட்டி அந்த துப்பாக்கி உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக, அதை எப்படி இயக்குவது என்று அந்த கனேடியருக்கு செய்துகாட்டும்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததாகவும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அந்த கனேடியர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
நண்பர் தெரிவித்துள்ள உண்மை
ஆனால், நடந்தது அதுவல்ல என்கிறார் கொல்லப்பட்ட கனேடியரின் நண்பரான Choi என்பவர்.
கனடாவின் வான்கூவரில் வாழ்ந்துவரும், Choiயும், அவரது நண்பரான 69 வயது கனேடியரும், தத்தம் மனைவிகளுடன் ஒரு குழுவாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
அந்தக் குழுவில் 28 பேர் இருந்துள்ளார்கள். அவர்களில் 10 பேர் கனேடியர்கள்.
ஊடகங்களில் வேறு விதமாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று கூறும் Choi, வழிகாட்டியிடம் சென்று துப்பாக்கி உண்மையானதுதானா என கேட்டது தன் நண்பர் அல்ல, வேறு இரண்டு பேர் என்கிறார்.
தாங்கள் அனைவரும் உயிரியல் பூங்காவில் ஓரிடத்தில் வளர்க்கப்பட்ட தீயைச் சுற்றி அமர்ந்து உணவருந்தியதாகவும், பின் தன் நண்பர் கழிவறை நோக்கிச் சென்றதாகவும் கூறுகிறார் Choi.
பின்னர், அனைவரும் தங்கள் வாகனத்தில் ஏறி தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குப் புறப்படலாம் என தயாரானபோது, அவர்களில் ஒருவர் அந்த கனேடியர் இரத்த வெள்ளத்தில் விழுந்துகிடப்பதைக் கண்டதாக தெரிவிக்கிறார் Choi.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும், ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Choi.
அதாவது, யாரோ இரண்டுபேர் அந்த வழிகாட்டியிடம் துப்பாக்கி குறித்து கேட்க, அவர் அதை கையாளும்போது தவறுதலாக துப்பாக்கி வெடிக்க, Choiயின் நண்பர் மீது குண்டு பாய்ந்துள்ளது.
ஆனால், அந்த கனேடியர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்துதான் அவர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த துப்பாக்கி, யானை அல்லது காண்டாமிருகத்தைக்கூட ஒரே குண்டில் கொல்லும் திறன் கொண்டதாம்.
இதற்கிடையில், Choiயின் நண்பர் சுடப்பட்ட விடயம் தொடர்பில் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |