பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் புற்றுநோய் அபாயம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை பிரான்ஸ் உறுதிசெய்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இறைச்சி பதப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் நைட்ரேட் மற்றும் நைட்ரைட் என்னும் ரசாயனங்களால் மலக்குடல் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்னும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை, கால்நடை மருத்துவ தயாரிப்பு ஏஜன்சியான Anses என்னும் பிரெஞ்சு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அத்துடன், இந்த இரண்டு ரசாயனங்களுக்கும், கருப்பை, சிறுநீரகம், கணையம் மற்றும் மார்பக புற்றுநோய்களுடனும் தொடர்பிருக்கலாம் என்றும் அந்த ஏஜன்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஆகவே, பதப்படுத்தப்படும் இறைச்சியில் அந்த இரண்டு ரசாயனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்துமாறு Anses ஆலோசனை கூறியுள்ளது.
இந்த நைட்ரேட் என்னும் ரசாயனம், விவசாயத்தில் உரமாக பயன்படுத்தப்படுவதுடன், இறைச்சி பதப்படுத்துவதில், இறைச்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும், இறைச்சிக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில் இந்த ரசாயனங்களால் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது குறித்து வெளியாகியுள்ள செய்தியால், பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆனால், முழுமையான தடைக்கு பதிலாக இறைச்சி பதப்படுத்தலில் நைட்ரைட்டின் பயன்பாடு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.