ஓமன் கடலில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி ஒருவர் உயிரிழப்பு
Cape Dao ship Attacked off Oman. 1 Indian killed: ஓமன் கடற்கரையில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய மாலுமி உயிரிழப்பு
ஓமன் கிழக்கு கடற்கரை பகுதியில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டு கொடிகளை ஏந்திய எம்.வி.கேப் டாவோ என்ற சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வைப்பர் சூரஜ் யாதவ் என்ற இந்திய மாலுமி கொல்லப்பட்டுள்ளார்.

அதே சமயம் அந்த கப்பலில் இருந்த மற்ற 19 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாலுமி வைப்பர் சூரஜ் யாதவ் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் உயிர் தப்பிய இந்திய மாலுமிகளை உடனடியாக தாயகத்திற்கு அழைத்து வர ஓமன் அரசுடன் இணைந்து செயல்படுமாறு இந்திய கடற்படைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உயிர் பிழைத்த இந்திய மாலுமிகள் ஓமன் அரசு கடற்படையால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.