பிரித்தானியாவில் எண்ணெய் கப்பல் மோதிய விபத்தில் கைதான மாலுமி ரஷ்ய நாட்டவர்
இங்கிலாந்து கடற்கரையில் எண்ணெய் டேங்கர் கப்பலுடன் மோதிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கப்பலின் மாலுமி ரஷ்ய நாட்டவர் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டவர்களே
குறித்த தகவலை கப்பலின் உரிமையாளரே வெளிப்படுத்தியுள்ளார். சோலாங் கப்பலின் எஞ்சிய குழுவினரும் ரஷ்ய மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை யார்க்ஷயரின் கிழக்கு கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த ஸ்டெனா இமாகுலேட் கப்பலை சோலாங் என்ற சரக்கு கப்பல் மோதியது. கடும் பனிமூட்டம் காரணமாகவே, இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஹம்பர்சைட் பொலிசார் தெரிவிக்கையில், சோலாங் கப்பலில் இருந்த ஒரு ஊழியரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த கப்பலின் மாலுமி 59 வயது நபரை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நெருப்பு கோளமாக
புதன்கிழமை பகலில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், கைதான நபர் தற்போதும் பொலிஸ் காவலில் உள்ளார் என்றே தெரிவித்துள்ளனர். விபத்து நடக்கும் போது ஸ்டெனா இமாகுலேட் கப்பல் நங்கூரமிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
ஆனால் அதைவிட சிறிய கப்பலான சோலங் எதிர்பாராத வகையில் மோத, எண்ணெய் கப்பல் ஒருசில நிமிடங்களில் நெருப்பு கோளமாக மாறியது.
தொடர்ந்து இரு கப்பலில் இருந்த ஊழியர்களும் உயிர் தப்பும் நோக்கில் கடலில் குதித்துள்ளனர். அதில் சோலாங் கப்பல் ஊழியர் ஒருவர் மாயமாகியுள்ளார். பெரும்பாலும் அவர் மரணமடைந்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |