சுவிட்சர்லாந்தில் கடைக்குள் மோதிய காரால் பரபரப்பு: வெளிநாட்டவர்கள் இருவர் கைது
சுவிஸ் நகரமொன்றில், கடை ஒன்றிற்குள் கார் ஒன்று மோதிய சமபவம் ஒன்று பெரும் பரபரப்பை உருவாக்கியது.
பரபரப்புக்குக் காரணம், அது ஒரு கொள்ளை முயற்சி!
கடைக்குள் மோதிய கார்
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள Pfungen என்னுமிடத்தில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள் ஒரு கார் ஒன்று மோதி நுழைந்தது.
அது, துப்பாக்கிகள் விற்கும் ஒரு கடை. தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் அது துப்பாக்கிகளைத் திருடும் முயற்சி என்பதை அறிந்து அந்தக் காரிலிருந்த இரண்டு பேரைக் கைது செய்தார்கள்.
அவர்களில் ஒருவர் ஸ்லோவேகியா நாட்டவரான 52 வயது நபர். மற்றவர், 24 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர்.
பொலிசார் அவர்களைக் கைது செய்யும்போது, கடைக்குள் வெடிபொருள் ஒன்றை வைத்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூற, அங்கு பெரும் பரபரப்பு உருவானது.
உடனடியாக அருகிலுள்ள ரயில் பாதை மூடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள, அங்கு வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
8.00 மணியளவில் நிலைமை சீரடைந்துள்ளது. விடயம் என்னவென்றால், இப்படி துப்பாக்கி கடைகளில் திருடும் சம்பவங்கள் சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவருகின்றன.
ஆக, இந்த திருட்டு முயற்சிக்கும், ஏற்கனவே நடந்த திருட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |