பாதசாரிகள் மீது பாய்ந்த கார்: கால்களை இழந்த பெண்: இத்தாலியில் பரபரப்பு
இத்தாலியில் பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் 8 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பாதசாரிகள் மீது மோதிய கார்
ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலியின் மொடெனா(Modena) நகரின் மையப்பகுதியில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பாதசாரிகள் 8 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நகர மேயர் மாசிமோ மெசெட்டி ஊடகங்களுக்கு அளித்த தகவலின் படி, 30 வயதுடைய ஓட்டுநர் தன்னுடைய காரை வேண்டுமென்றே நடைபாதையை நோக்கி செலுத்தி பாதசாரிகள் மீது காரை மோதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காரின் இடுக்கில் மாட்டிக் கொண்டதில் பலத்த காயமடைந்தார். காயத்தின் தீவிர தன்மை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது இரண்டு கால்களும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரின் நிலைமை உயிருக்கு ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளது.
பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக பாய்ந்த கார் இறுதியில் கடை ஒன்றின் ஜன்னல் மீது மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சாரதி, இத்தாலியின் பெர்காமோவில் பிறந்து தற்போது மொடெனா பகுதியில் வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |