குழந்தை அழுததால் தாயின் கவனம் சிதற ஏரிக்குள் பாய்ந்த கார்: வெளியாகியுள்ள பரபரப்பு வீடியோ
சீனாவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது குழந்தை அழுததால் அவரது கவனம் சிதற, கார் ஏரி ஒன்றிற்குள் பாய்ந்தது.
அந்தக் காரிலிருந்த அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்கும் பரபரப்புக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மார்ச் 29 அன்று, சீனாவின் Jinting என்ற நகரிலுள்ள Taihu ஏரிக்குள் கார் ஒன்று வேகமாகப் பாய்ந்ததைக் கண்ட மக்கள் பதறிப்போய் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
ஆனால், கார் அதற்குள் வேகமாக தண்ணீரில் மூழ்கத் துவங்கியுள்ளது. மக்கள் சத்தமிட, சற்று தொலைவில் கால்வாய் ஒன்று தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த Yao Wanshun மற்றும் Gu Jianzhi என்னும் இருவர், சட்டென தங்கள் பொக்லைன் இயந்திரத்தை ஏரிக்குள் இறக்கி, அந்தக் காரை மீட்க முயன்றுள்ளனர்.
ஆனாலும் வேகமாக அந்த கார் மூழ்கத்துவங்கவே, அந்த பொக்லைன் இயந்திரத்தின் கையால் அந்தக் காரை Gu பிடித்துக்கொள்ள, Yao அந்தக் காரின் கண்ணாடியை உடைத்துள்ளார்.
அதற்குள் Gu ஓடோடி வர, அந்தப் பெண் தன் குழந்தையை அவரிடம் கொடுக்க முயல, தண்ணீருக்குள் பாய்ந்த Yao அந்தப் பெண்ணை தண்ணீரிலிருந்து தூக்கி வெளியே வர உதவியுள்ளார்.
Yao மற்றும் Gu ஆகியோர் பரபரப்பாக அந்தத் தாயையும் மகளையும் காப்பாற்ற முயலும் காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த தாயும் மகளும் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரியவந்துள்ளது. தன்னையும் தன் குழந்தையின் உயிரையும் காப்பாற்றிய இருவரையும் நேரில் சந்தித்து தான் நன்றி சொல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
இதற்கிடையில், Yao மற்றும் Gu இருவருக்கும் வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது.