புதிய பாப்பரசராக ஆசிய நாட்டவர் தெரிவாகலாம்... கசிந்த தகவல்
பிலிப்பைன்ஸ் நாட்டவரான கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
கார்டினல் டேகிள்
ஆசிய பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் கார்டினல் டேகிள், கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரிய அதிகார தளமான ஐரோப்பாவிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
அவரது தொற்றும் புன்னகை, எளிதான சிரிப்பு மற்றும் வார்த்தைகளில் தன்னிச்சையான தன்மை ஆகியவை மறைந்த பாப்பரசர் பிரன்சிஸை நினைவுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த பாப்பரசருக்கான அதிகாரப்பூர்வமற்ற பட்டியல்களில் சிலர் கார்டினல் டேகிளைச் சேர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பாப்பரசராக டேகிள் தெரிவு செய்யப்பட்டால், உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களுக்கு, திருச்சபையை நவீன காலகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் தொலைநோக்குப் பார்வையுடன் கார்டினல்கள் முன்னேற விரும்புகிறார்கள் என்பதற்கான சமிக்ஞையாகவும் இது இருக்கும்.
ஆசியாவிலிருந்து பாப்பரசர்
மணிலாவின் முன்னாள் பேராயரான டேகிள், தற்போது ஆசியாவிலிருந்து வரும் முதல் பாப்பரசராக இருப்பார். 67 வயதான கார்டினல் டேகிள் கடந்த ஐந்து ஆண்டுகளாக, திருச்சபையின் மிஷனரிப் பிரிவான வத்திக்கானின் சுவிசேஷப் பணிக்குழுவிற்குத் தலைமை தாங்கி வருகிறார்.
அந்தப் பதவி, வளரும் நாடுகளில் உள்ள தேசிய தேவாலயங்கள் மீது அவருக்கு மகத்தான செல்வாக்கைக் கொடுத்தது. மட்டுமின்றி, 2020 ஆம் ஆண்டு அவரை வத்திக்கானுக்கு அழைத்து வந்ததன் மூலம், பாப்பரசருக்குத் தேவையான அனுபவங்களில் பிரான்சிஸ் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார் என்றே கூறுகின்றனர்.
பல கார்டினல்கள் ஏற்கனவே டேகிளை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்கள், மேலும் பலர் ஆசியாவிலிருந்து ஒரு பாப்பரசரைக் கொண்டிருப்பதில் ஒரு ஈர்ப்பிருப்பதாக கருதுகின்றனர். அத்துடன் திருச்சபைத் தலைவர்களால் விசுவாசத்தின் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான பகுதியாக ஆசியா கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |