சுகாதாரத்துறையில் வேலை... பல ஆயிரம் வெளிநாட்டினர் பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம்
சுகாதாரப் பணியாளர்களாக பிரித்தானியாவிற்கு வேலைக்கு வந்த 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இங்கு புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது
உள்விவகார அமைச்சகத்திடம் இருந்து காப்பகப் பணியாளர்களாக வேலைக்கு விசாக்களைப் பெற்ற நபர்களால், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 5,600-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்க்ள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான காப்பகப் பணியாளர் விசா நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த புள்ளிவிவரங்கள் பிரித்தானியாவின் எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகள் குறித்துப் புதிய தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவே கூறுகின்றனர்.
காப்பகத் துறையில் வேலைவாய்ப்பு பெறும் நோக்கம் இல்லாத வெளிநாட்டுப் பிரஜைகளால் இந்த விசா பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்படியான விண்ணப்பங்கள், முறையாக பிரித்தானியாவில் நுழைவதற்கான குறுக்குவழி என்றும் எச்சரித்திருந்தனர். 2021-ல் இது போன்ற நான்கு கோரிக்கைகளும், 2022-ல் 36 கோரிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன, பின்னர் 2023-ல் இது 856 ஆக உயர்ந்தது.
ஆனால், 2024-ஆம் ஆண்டளவில், இந்த எண்ணிக்கை 5,669 ஆக உயர்ந்திருந்தது. மேலும் கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கூடுதலாக 3,671 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதாவது ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டுக் காப்பகப் பணியாளர்களால் 10,236 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலானவை போலி
கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து, குடும்ப உறுப்பினர்கள் உட்பட 760,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணி விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், உள்விவகார அமைச்சகத்தின் விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து காப்பக ஊழியர்களை இனி பணியமர்த்த வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
காப்பக ஊழியர்கள் விசாக்கள் பெரும்பாலும் பாதுகாப்பான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டன, எனவே இந்த புகலிடக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை போலியானவையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.
அந்த விசாக்கள் நிராகரிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட நபர்கள் முடிந்தவரை விரைவாக அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |