சரக்கு கப்பலில் பற்றிய பயங்கர தீ: சீன துறைமுகத்தில் 20 பேர் பலி, 5 பேரை காணவில்லை
Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சரக்கு கப்பலில் தீ விபத்து
வடகிழக்கு சீனாவின் முக்கிய துறைமுக நகரான சிங்டாவ்வில்(Qingdao) பழுதுபார்க்கும் பணிக்காக துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 5 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி முதல் ஓஷன் மெலடி(Ocean Melody) என்ற பெயர் கொண்ட இந்த லைபீரிய(Liberian) கொடிய ஏந்திய கப்பலானது சிங்டாவ் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் வரை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய தீயானது இன்று மதியம் 2.30 மணிக்கு முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அவசர கால மீட்பு படையினர் 12 பேர் பத்திரமாக மீட்டுள்ளனர். 5 பேர் வரை தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறியவும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து ஏற்பட்ட இந்த துறைமுகம் சீனாவின் மாநில கப்பல் கட்டும் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால்(CSSC) நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |