நார்வேயில் வீட்டு தோட்டத்தில் மோதிய பிரமாண்ட சரக்கு கப்பல்: விபத்து நடந்தது எப்படி?
நோர்வேயில் சரக்குக் கப்பல் ஒன்று வீட்டின் தோட்டத்தில் மோதி நின்ற சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரைதட்டிய சரக்கு கப்பல்
நோர்வேயில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் சரக்குக் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக தரைதட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்தபோது உறங்கிவிட்டதாகக் கூறப்படும் அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விபத்து நடந்தது எப்படி?
கடந்த வியாழக்கிழமை ட்ரான்ட்ஹைம் (Trondheim) அருகே, 135 மீட்டர் நீளமுள்ள சரக்குக் கப்பல் ஒன்று, ஜோஹன் ஹெல்பெர்க் (Johan Helberg) என்ற நபரின் வீட்டை நெருங்கியவாறு தரை தட்டியது. அதிர்ஷ்டவசமாக, ஹெல்பெர்க் உறங்கிக் கொண்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதிகாரி மீது குற்றச்சாட்டு
இச்சம்பவம் தொடர்பாக, கப்பலில் இரண்டாவது அதிகாரியாகப் பணிபுரிந்த 30 வயது மதிக்கத்தக்க உக்ரைனியர் ஒருவர் மீது காவல்துறையினர் கவனக்குறைவாகக் கப்பலை இயக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் இருந்த 16 பேரில் இவரும் ஒருவர். விசாரணையின் போது, தான் பணியில் இருந்தபோது உறங்கிவிட்டதாலேயே கப்பல் தரைதட்டியதாக அந்த அதிகாரி ஒப்புக்கொண்டார்.
விசாரணை தொடர்கிறது
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
எனினும், கப்பலில் பணிபுரியும் நேரம் மற்றும் ஓய்வு நேரம் தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, தரைதட்டிய கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |