பிரபல பிரெஞ்சு நடிகை மீது வழக்கு: ஒரு மில்லியன் டொலர்கள் இழப்பீடு
ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாததால், தன் கை உடைந்ததாக பொய் சொன்னார் என பிரபல பிரெஞ்சு நடிகை மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர்ந்த நடிகை
பிரபல பிரெஞ்சு நடிகையான ஈவா கிரீன் (Eva Green, 42), தான் நடிக்க இருந்த A Patriot என்னும் திரைப்படம் கைவிடப்பட்டதால், நஷ்ட ஈடு கோரி White Lantern Film என்னும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
ஒப்பந்தப்படி, அந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சம்பளமாக பேசப்பட்ட ஒரு மில்லியன் டொலர்களை (810,000 பவுண்டுகளை) கொடுக்கவேண்டும் என்று கோரி அவர் வழக்குத் தொடர்ந்தார்.
நடிகை மீதே குற்றம் சாட்டிய தயாரிப்பு நிறுவனம்
ஆனால், ஈவா அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறிய அந்த தயாரிப்பு நிறுவனம், அவர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ஈவா, தான் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு கதையை உருவாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டியது அந்நிறுவனம்.
அத்துடன், தனக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் தன்னால் நடிக்கவரமுடியாது என்று கூறிவிடலாமா என ஈவா தனது ஏஜண்டிடம் ஆலோசனை கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஈவா தரப்பு, இது ஈவாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று கூறியிருந்தது.
நடிகைக்கு சாதகமாக தீர்ப்பு
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ஈவா எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை என்று முடிவு செய்துள்ளார்.
Pic: AP
ஆகவே, ஈவா கோரியபடி White Lantern Film நிறுவனம் அவருக்கு ஒர் மில்லியன் டொலர்கள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார் அவர்.
தீர்ப்பைத் தொடர்ந்து, தனது தொழில் தொடர்பான நற்பெயர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார் ஈவா.