திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!
தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி-யும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை, எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை என குறிப்பிட்டார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி உடப்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
— எருமையார் (@Erumai_Meki) March 28, 2021
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆ.ராசா, ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது என கூறினார்.
முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.