250 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது வழக்கு.. பின்னணி என்ன?
அமெரிக்க நாட்டில் மோசடி நிகழ்த்தியதாக கூறி இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுக்க முயன்றாரா?
கௌதம் அதானி, ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர் லஞ்சத்தை கொடுக்க முயன்றதாகவும், அதனை மறைக்க திட்டமிட்டதாகவும் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கெளதம் அதானி மற்றும் ஏழு நிர்வாகிகள், பத்திர மோசடி, வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறிய குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 20) அதானியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதானி மற்றும் சில அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை.
அதானி மற்றும் அவரது குழுமத்தின் அதிகாரிகள் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து தங்கள் ஊழல் நடைமுறைகளை மறைத்து, கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலம் 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் நிதி திரட்டியதாக குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் தரப்பில், " பிரதிவாதிகள் பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட முயன்றபோது லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை மறைக்க முயன்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |