UPSC தேர்வு வினாத்தாளில் சர்ச்சையாகியுள்ள தந்தை பெரியார் குறித்த கேள்வி
UPSC தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின், சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சர்ச்சையான கேள்வி..,
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது.
இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 13ஆம் திகதி வெளியானது.
இந்நிலையில், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் சென்னையில் மட்டும் 24,364 பேர் எழுதுகின்றனர்.
இன்று காலை தொடங்கி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதன் ஆப்சனில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார்.
சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வெ.ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஆகியுள்ளது.
இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |