பூனையால் 100 வீடுகளில் தீவிபத்து! எச்சரிக்கை செய்தி
தென் கொரியாவில் பூனைகளால் 100 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாக அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தென் கொரியாவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு பூனைகளே காரணம் என்று புதிய பாதுகாப்பு பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது.
அமெரிக்கன் ஹ்யூமன் அசோசியேஷனின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு செல்லப்பிராணிகள் காரணமாகின்றன.
ஒரு CNN கட்டுரையின்படி, ஜனவரி 2019 மற்றும் நவம்பர் 2021-க்கு இடையில் பூனைகளால் 107 வீடுகள் தீப்பிடித்த நிகழ்வுகளை கண்டறிந்துள்ளதாக சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை வியாழக்கிழமை அறிவித்தது.
நிபுணர்களின் கூற்றுப்படி, Hotplate சாதனங்களின் மேற்பரப்பில் உள்ள தொடு உணர் பொத்தான்களில் பூனைகள் தெரியாமல் தொட்டுவிடுவதால் இதுபோன்ற தீவிபத்துக்கள் நடப்பதாக கருதப்படுகிறது.
இந்த Hotplate சாதனங்கள் அதிக நேரம் பயன்பாட்டில் வைத்திருந்தால் அதிக வெப்பம் அடைந்து தீப்பிடிக்க வழிவகுக்கும் என்று தீயணைப்பு சேவை கூறுகிறது.
கணக்கெடுப்பின்படி, தென் கொரியாவில் பாதிக்கும் மேற்பட்ட தீ, வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் நடந்துள்ளது. இருப்பினும் பூனையால் ஏற்பட்ட தீவிபத்து சம்பவங்களில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"பூனை தொடர்பான தீ விபத்துகள் சமீபகாலமாக தொடர்ந்து நிகழ்கிறது," என்று தீயணைப்பு துறை அதிகாரி Chung Gyo-chul ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் "வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீ பரவலாகப் பரவக்கூடும் என்பதால், செல்லப்பிராணிகளைக் கொண்ட குடும்பங்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.