பிரதான சாலையில் ஏற்பட்ட விபத்து: சாரதிக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் சாலை விபத்தை ஏற்படுத்தி நால்வர் மரணமடைய காரணமான லொறி சாரதிக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலராடோ மாகாணத்தின் Lakewood பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் குறித்த பெரும் சாலை விபத்து நடந்துள்ளது. பரபரப்பான சாலையில் தனது 18 சக்கர வாகனத்தை செலுத்தி வந்த 26 வயதான சாரதி Rogel Aguilera-Mederos சுமார் 2 டசின் வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தின் தாக்கத்தால் குறித்த பகுதியில் ராட்சத தீப்பந்து வெடித்ததுடன் நால்வர் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது. சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, திங்கட்கிழமை குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், Aguilera-Mederos என்பவருக்கு தொடர்ந்து 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த 27 குற்றவியல் வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனையை விதித்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Lakewood பகுதியில் இதுவரையில் அதுபோன்ற ஒரு கோரவிபத்து ஏற்பட்டதில்லை எனவும், இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்த முடியாமல் பல மணி நேரம் போராடும் நிலையில் அந்த விபத்துப்பகுதி காணப்பட்டது எனவும் பொலிஸ் தரப்பு சாட்சியம் அளித்துள்ளது.
கட்டுப்பட்டை இழந்த வாகனம் சாரதியின் பல்வேறு தவறான முடிவுகளால் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது என வாதிட்டனர் அரசு தரப்பு சட்டத்தரணிகள். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கண்ணீர் விட்டு கதறி அழுத Aguilera-Mederos,
தயவு தாட்சண்யத்துடன் இருக்குமாறு நீதிபதியிடம் கெஞ்சினார். மிக மோசமான விபத்து அது என ஒப்புக்கொண்ட Aguilera-Mederos, முழு சம்பவத்திற்கும் பொறுப்பேற்கிறேன் என குறிப்பிட்டு, அது ஒரு விபத்து தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், அது ஒன்றும் திட்டமிட்ட நடவடிக்கை அல்ல எனவும், நான் கொலைகாரனோ கொடூர குற்றவாளியோ அல்ல எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.