கரூர் துயர சம்பவம் - விஜய் டெல்லியில் ஆஜராக சிபிஐ சம்மன்
கரூர் துயர சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் துயர சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவும்(SIT) விசாரித்து வந்தது.
இதனையடுத்து, சிபிஐ விசாரணை கோரி தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
விஜய்க்கு சம்மன்
ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ, கரூருக்கு வந்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல்துறையினர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகிய முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் ஜனவரி 12 ஆம் திகதி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |