முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்திய பிரபலங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், பல பிரபலங்கள் முதல் ஆளாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், பிரபலங்கள் பலரும் வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் முதல் ஆளாக வாக்களித்துச் சென்றுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், அஜித், ஷாலினி, சூர்யா, சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரகுமான், விவேக் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருக்கும் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
நடிகர் கமல்ஹாசன், அவரது மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் வந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தியாகராயா நகர் ஹிந்தி பிரச்சார சபாவில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
ஏ.ஆ.ர் ரகுமான் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
