தீவிர புயலாக வலுபெறும் டானா.., தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
22 ஆம் திகதி நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 5.30 மணி அளவில் டானா புயலாக வலுபெற்றது.
புயல் காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஒரிசா தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு தெற்கு- தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு தெற்கு- தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ஆம் திகதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.
இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் திகதி இரவு முதல் 25ஆம் திகதி காலை கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், தமிழகத்தில் இன்று (23.10.2024) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |