இன்னும் 2 ஆண்டுக்குள் நிலவை முத்தமிடவுள்ள சந்திரயான் -4: அடுத்த அப்டேட் கொடுத்த விஞ்ஞானிகள்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஜப்பானுடன் இணைந்து சந்திரயான் -4 திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிலவுக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சந்தியான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 நிலவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த விண்கலமானது சுமார் 1 மாதக் காலம் பயணம் செய்து ஆகஸ்ட் 23 அன்று மாலை 6.03 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து தனது பணிகளையும் வெற்றிகரமாக செய்து வந்து, உறக்க நிலைக்கு சென்றது. சந்திரயானின் வெற்றிக்கு அடுத்து ஆதித்யான L1 சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்டு இருகின்றது.
இந்நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திரயான்-4 நிலவை சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்குள் செல்லும் சந்திரயான்-4
ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த திட்டமானது "லூபெக்ஸ்" என்று அழைக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படவுள்ளது.
அத்துடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்கவுள்ளதாக இஸ்ரோவின் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் ஆயுட்காலம் 6 மாதங்களெனவும் இது முந்தைய திட்டங்களை விட சவாலானதாக அமையுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் நடவடிக்கைக்கு 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிலுள்ள ரோவரின் எடை 350 கிலோ எனவும் ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் பொறுத்தப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், நிலவில் உள்ள மணற்துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 4-ல் அனுப்பப்படவுள்ள ரோவர் அதிக பட்சம் ஒரு கிலோ மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமெனவும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |