பிரான்ஸ் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் கவனத்திற்கு: கொரோனா விதிகளில் செய்யப்பட உள்ள மாற்றங்கள்...
வரும் திங்கட்கிழமை, மார்ச் மாதம் 14ஆம் திகதி, பிரான்ஸ் தனது கொரோனா விதிகளில் பலவற்றை நெகிழ்த்த உள்ளது.
பெரும்பாலான இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ் தேவையில்லை என்பது முதல், பெரும்பாலான பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை என்பது வரையிலான பல்வேறு மாற்றங்கள் அமுலுக்கு வர உள்ளன.
இந்நிலையில், பிரான்சுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளோரை இந்த விதி மாற்றங்கள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பிரான்சுக்கு பயணித்தல்
பயண விதிகள் இன்னமும் நீடிப்பதால், எல்லோரும் பிரான்சுக்குள் நுழைய முடியாது.
பச்சைப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருவோர், சுற்றுலா உட்பட எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம். நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால் கொரோனா பரிசோதனைக்குக் கூட உட்படவேண்டியதில்லை. நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெறவில்லையானால், கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை எல்லையில் நீங்கள் காட்டவேண்டியிருக்கும்.
நீங்கள் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் இடம்பெற்றுள்ள ஆரஞ்சுப் பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து வருபவரானால், நீங்கள் கொரோனா தடுப்பூசி பெறாத பட்சத்தில், உங்களுக்கு பிரான்சுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களோ, எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம், உங்களுக்கு கொரோனா பரிசோதனையும் தேவையில்லை.
தடுப்பூசி பெறாதோர், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும், கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் காட்டவேண்டியிருக்கும்.
சில சந்தர்ப்பங்களில், கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை எல்லையில் காட்டவேண்டி வரலாம். கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விதிகள் எதுவும் மார்ச் 14ஆம் திகதி மாற்றப்பட்டபோவதில்லை.
நீங்கள் பிரான்சுக்கு வந்துவிட்டீர்களானால், மார்ச் 14 முதல் சில மாற்றங்களை சந்திக்கலாம்.
தடுப்பூசி பாஸ்கள்
மார்ச் 14 முதல் நர்ஸிங் ஹோம், மருத்துவமனைகள், மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்வதற்கு மட்டுமே தடுப்பூசி பாஸ் தேவை.
மாஸ்க் விதிகள்
மாஸ்க் விதிகளும் மார்ச் 14 அன்று நெகிழ்த்தப்பட உள்ளன என்றாலும், மொத்தமாக விலக்கிக்கொள்ளப்படப்போவதில்லை.
மதுபான விடுதிகள், கடைகள் முதலான கட்டிடங்களுக்குள் மாஸ்க் அணியத்தேவையில்லை என்றாலும், பொதுப்போக்குவரத்தின்போது அவை அவசியம். மாஸ்க் அணியாதவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கும் மாஸ்க் அவசியம்.
தனிமைப்படுத்தல்
பிரான்சிலிருக்கும்போது கொரோனா பரிசோதனையில் உங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், நீங்கள் உங்களை, உங்களுக்கு கொரோனா தொற்று நீங்கும்வரை, அதாவது கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும்வரை, நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும், கொரோனா தொற்றிய ஒருவருடன் நீங்கள் இருந்தது தெரியவந்தால், நீங்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டும். நீங்கள் தடுப்பூசி பெற்றவராக இருந்து, கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், நீங்கள் கட்டாயம் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. என்றாலும், தனிமைப்படுத்துதல் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
மீதமுள்ள விதிகள் கட்டாயம் அல்ல, ஆனால் பரிந்துரைகள். அதாவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கட்டிடங்களுக்குள் மாஸ்க் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
அத்துடன், கைகளைக் குலுக்குதல், கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றல் போன்றவற்றைத் தவிர்க்குமாறும், கைகளைக் கழுவுதல், சானிடைஸர் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடுப்பூசி பாஸ் பயன்பாடு தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதேயொழிய, முற்றிலுமாக அகற்றப்படவில்லை. மற்றொரு கொரோனா அலை உருவாகுமானால் அது மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.