சார்லஸ் - ஜெலென்ஸ்கி சந்திப்பால் கடும் கொந்தளிப்பில் டொனால்டு ட்ரம்ப்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் வரவேற்றதிலிருந்து டொனால்டு ட்ரம்ப் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பிழந்தவராக
உக்ரைன் ஜனாதிபதியுடனான மன்னரின் சந்திப்பு ட்ரம்பை மதிப்பிழந்தவராக உணர வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரத்தில் உள்ள நபர்கள் அமெரிக்காவில் உள்ள பிரித்தானிய அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆனால், லண்டனில் முக்கியமான சந்திப்புக்கு பிரித்தானியப் பிரதமரின் அழைப்பின் பேரில் சென்ற ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மன்னர் சந்திக்காமல் தவிர்ப்பது முறையல்ல என்று அமெரிக்க ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள சார்லஸிடமிருந்து ட்ரம்பிற்கு அழைப்பை வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னர் சார்லஸ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார்.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் வெடித்த கருத்து மோதலையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலென்ஸ்கி ட்ரம்பால் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே லண்டனில் மன்னருடனான இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
ஏற்றுக்கொள்ளவில்லை
அடுத்த நாள், திங்களன்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் மன்னர் சார்லஸ் சந்திப்பை முன்னெடுத்தார். அன்றைய நாள் கனடா மீது 25 சதவிகித வரியை ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மன்னர் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு தொடர்பில் ட்ரம்பின் கருத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, யார் யாரை சந்திக்க வேண்டும் என்று மன்னர் முடிவெடுப்பார் என்றும், அதில் அரசாங்கம் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |