இனி இந்த குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்... முக்கிய முடிவெடுத்த நாடு
தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தாய்லாந்தில் பாலியல் குற்றவாளிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நீண்ட கால சிறை தண்டனை விதிப்பு இந்த வழக்கில் இனி தாய்லாந்தில் இருக்காது என்றே கூறப்படுகிறது. குறித்த நடைமுறைக்கு இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் பெறப்படும் எனவும், தொடர்புடைய குற்றவாளி 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார் எனவும் தாய்லாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதம் கீழ்சபை நிறைவேற்றிய குறித்த மசோதாவானது, திங்கள்கிழமை 145 செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் நாட்டின் அரச குடும்பத்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
தாய்லாந்து சிறைகளில் இருந்து 2013 மற்றும் 2020 க்கு இடையில் 16,413 பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இவர்களில் 4,848 பேர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் மசோதா அமுலுக்கு வந்தால், போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் சில அமெரிக்க மாகாணங்களின் வரிசையில் தாய்லாந்தும் இடம்பெறும்.
இதனிடையே, குறித்த மசோதா கால தாமதமின்றி அமுலுக்கு வர வேண்டும் என நீதித்துறை அமைச்சர் Somsak Thepsuthin குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாவது இனியும் பொறுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆன்மை நீக்கம் சட்டமாவதால் மட்டும் பாலியல் குற்றங்கள் குறைந்து விடாது என பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னேற்ற இயக்க அறக்கட்டளையின் இயக்குனர் Jaded Chouwilai தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளின் மனப்போக்கை சிறை தண்டனை காலகட்டத்தில் மாற்ற முயற்சிக்க வேண்டும் எனவும், ஆன்மை நீக்கம் செய்யப்படுவதால் அத்தகைய குற்றவாளிகள் மறுவாழ்வு பெற்று திருந்தி வாழ முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.