எலான் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்: யார் இவர் தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் வலது கரமாக சென்னை சேர்ந்த இளைஞர் ஶ்ரீராம் கிருஷ்ணன் செயல்பட உள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான இழுபறி நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், அக்டோபர் மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார்.
அத்துடன் ட்விட்டரை வாங்கிய சில மணி நேரங்களிலேயே, ட்விட்டரின் இதுநாள்வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்.
ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை ட்விட்டரில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், இப்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடியுள்ளார்.
சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க பொறியாளரான ஶ்ரீராம் கிருஷ்ணன், இப்போது எலான் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த தகவலை ஶ்ரீராம் கிருஷ்ணன் அவரது ட்விட்டர் கணக்கு தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
யார் இந்த ஶ்ரீராம் கிருஷ்ணன்?
ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார், அவரது தாயார் இல்லத்தரசி, அவருக்கு 2002 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீராம் கிருஷ்ணன் 2001-2005 வரை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் படித்தார், அதை தொடர்ந்து 2005 முதல் 2011 வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்காவின் சியாட்டிலுக்கு குடிபெயர்ந்தார்.
அதன்பின் ஸ்ரீராம் 2013-2016க்கு இடையில் மெட்டாவில் (பேஸ்புக்) பணிபுரிந்ததாக அவரது லிங்க்டின் சுய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு 2017 முதல் 2019 வரை ட்விட்டரில் பணியாற்றினார்.
ட்விட்டரில் நுகர்வோர் குழுக்களை வழிநடத்திய ஸ்ரீராம், அந்த நிறுவனத்தில் பயனர் அனுபவம், தேடல், கண்டுபிடிப்பு மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சி ஆகிய பிரிவுகளைக் கையாண்டார்.
ஸ்ரீராம் கிருஷ்ணனின் தொழில்கள்:
ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனத்தில் a16z என்று அழைக்கப்படும் 'Andreesen Horowitz' இல் பங்குதாரர். இந்த Andreesen Horowitz மூலம் பல்வேறு நுகர்வோர் ஸ்டார்ட் அப்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.
பிட்ஸ்கி, ஹாபின், பாலிவொர்க் போன்ற நிறுவனங்களின் வாரியங்களில் ஸ்ரீராம் உறுப்பினராக உள்ளார், ஸ்ரீராம் கிருஷ்ணன் a16zஇல் சேருவதற்கு முன்பு ட்விட்டர் உட்பட பல பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
எலான் மஸ்க்குடன் சந்திப்பு:
ஸ்ரீராமும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து “தி குட் டைம் ஷோ” என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்தனர்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி எலான் மஸ்கை ஒரு நள்ளிரவு கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்ததாகவும், அந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் அதில் கலந்து கொள்ள எலான் மஸ்க் ஒப்புக் கொண்டதாகவும் ஸ்ரீராம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்து இருந்தார்.
Getty
அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதி எலான் மஸ்கை அவரது ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் உள்ளது.
ஸ்ரீராம் கிருஷ்ணனின் சமீபத்திய ட்வீட்:
பொறியியலாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் நிறுவனத்திற்காக எலான் மஸ்க்குடன் ஒத்துழைப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Now that the word is out: I’m helping out @elonmusk with Twitter temporarily with some other great people.
— Sriram Krishnan - sriramk.eth (@sriramk) October 30, 2022
I ( and a16z) believe this is a hugely important company and can have great impact on the world and Elon is the person to make it happen. pic.twitter.com/weGwEp8oga
அதில் "நான் எலான் மஸ்க்கிற்கு தற்காலிக அடிப்படையில், வேறு சில மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டர் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது எலான் மஸ்க் தலைமையில்தான் நடக்கும்" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டில், தாம் இன்னும் தற்போதைய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.