விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62
தமிழ்நாட்டை சேர்ந்த சக்திகுமார் ராமச்சந்திரன் என்பவரின் OrbitAID Aerospace நிறுவனம் உருவாக்கிய AayulSAT செயற்கைகோளுடன் PSLV C62 ஏவப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட PSLV C62
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV C62 ராக்கெட் இன்று காலை 10;18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த PSLV C62 ராக்கெட்டில், பூமியை கண்காணிக்கும் EOS-N1, எரிபொருள் நிரப்பும் சோதனைக்கான AayulSAT ஆயுள்சாட் உள்ளிட்ட 18 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதில் EOS-N1 செயற்கைகோளில் பூமியில் உள்ள மிகச்சிறிய பொருள்களை கூட உற்று கவனிக்கும் அதிநவீன உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எல்லை பகுதிகளில் எதிரி நாட்டின் நகர்வுகள் மற்றும் விவசாய பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை ஆகியவற்றை மிகத்துல்லியமாக கண்டறியும் திறன் உடையது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம்
இதே போல், AayulSAT எனப்படும் செயற்கைகோள்,சுற்றுப்பாதையில் உள்ள விண்கலங்களின் ஆயுளை நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த சக்திகுமார் ராமச்சந்திரன் என்பவரின் OrbitAID Aerospace என்ற நிறுவனம் இந்த AayulSAT செயற்கைகோளை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசின் StartUP TN மற்றும் TANSIM அமைப்புகள் மூலம் இந்த நிறுவனத்திற்கு, சுமார் ரூ.4.86 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கும் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களுக்கு சுமார் 5-6 ஆண்டுகளுக்கான எரிபொருள்களுடன் அவை அனுப்பப்படும். அதன் எரிபொருள் தீர்ந்தவுடன் விண்வெளி குப்பைகளாக மாறி விடும்.
இவ்வாறு விண்வெளியில் செயற்கைகோள் குப்பைகள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் ராக்கெட் ஏவுதலில் கூட சிக்கல் ஏற்படும்.
25 கிலோ எடையுள்ள இந்த AayulSAT, விண்வெளியில் எரிபொருள் தீர்ந்து போன செயற்கைக்கோள்களுக்கு எரிபொருளை நிரப்பி, செயற்கைகோள்களின் ஆயுள்காலத்தை நீட்டித்து குப்பைகள் சேரவிடாமல் தடுக்கும்.
நுண் ஈர்ப்பு விசையில் எரிபொருளை மாற்ற முடியும் என்பதை நிரூபிப்பதன் மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிக்கும் திறன் கொண்ட 4 நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைகிறது.
உலகளவில், அமெரிக்காவின் Orbit Fab போன்ற நிறுவனங்கள் இதேபோன்ற எரிவாயு நிலைய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகின்றன, ஆனால் இந்தத் துறை இன்னும் ஆரம்ப கட்டங்களில் உள்ளது.
சக்திகுமார் ராமச்சந்திரன்
இது குறித்து பேசிய orbitaid நிறுவனர் சக்திகுமார் ராமச்சந்திரன், ஆயுல்சாட் என்பது சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்படும் இந்தியாவின் முதல் வணிக டாக்கிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் இடைமுகமாக இருக்கும்.
பூமியின் தாழ் வட்டப்பாதை மற்றும் பூமியின் ஒத்திசைவான சுற்றுப்பாதைகள் இரண்டிலும் செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிக்க உதவும் எரிபொருள் நிலையங்களை விரைவில் சுற்றுப்பாதையில் அமைப்போம்.

இந்த ஆண்டின் இறுதிக்குள், ஒரு சேசர் செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளோம், இது ஆயுல்சாட்டுடன் இணைந்து சுற்றுப்பாதையில் உண்மையான எரிபொருள் நிரப்புதலை நிரூபிக்கும். ஆயுல்சாட் இப்போது எங்கள் முதல் RPOD பணிக்கான இலக்கு செயற்கைக்கோளாகவும் செயல்படும்." என தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் ராமச்சந்திரன், தனது விமானப் பொறியியல் படிப்பை கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும், விண்வெளி பொறியியல் மற்றும் ராக்கெட் தொடர்பான M.E படிப்பை ஜார்கண்டிலும் பயின்றுள்ளார்.
அதைதொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில்(IISc) திட்ட கூட்டாளியாகப்(Project Associate) பங்களித்தார்.
2021 ஆம் ஆண்டில் OrbitAID Aerospace நிறுவனத்தை தொடங்கி அதன் CEO ஆக செயல்பட்டு வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |