பந்துவீச்சாளர்கள் அபாரம்... டெல்லியை மொத்தமாக சிதைத்த சென்னை அணி
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டெவன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் இருவரும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர். டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தி இருந்த கான்வே இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார்.
28 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அவர் அரைசதம் கடந்தார். இதனால் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை கடந்து அசத்தியது. சிறப்பாக விளையாடிவந்த கெய்க்வாட் 41 ஓட்டங்களில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து துபே களமிறங்கினார். 49 பந்துகளில் 87 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டெவன் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராயுடு களமிறங்க துபே 32 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து அணித்தலைவர் டோனி களமிறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட டோனி 21 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்ரிகர் பாரத் களமிறங்கினர். வார்னர் 12 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 20 பந்துகளில் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அணித் தலைவர் ரிஷப் பந்த் 11 பந்துகளில் 21 ஓட்டங்களில் வெளியேற, ஷர்தூல் தாக்கூர் 24 ஓட்டங்கள் சேர்த்தார்.
எஞ்சிய வீரர்கள் சென்னை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 17.4 ஓவர்களில் டெல்லி அணி 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் சென்னை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.