கடமையை செய்யத் தவறிய அமெரிக்க கேபிடல் தலைமைக் காவல் அதிகாரி! கட்டாயத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலை தடுக்கத் தவறியதற்காக கட்டிடத்தின் தலைமைக் காவல் அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் உள்ளே வரை சென்று தாக்குதலை நடத்திய நிலையில், அதனை தடுக்கத் தவறியதற்காக அமெரிக்க கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சண்ட் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கடமையைச் செய்ய தவறியதற்காக அவர் பதவி விலகவேண்டும் என்றும், அவர் ராஜினாமா செய்யாவிட்டால் கட்டாய பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் சக் ஷுமர் ஆகியோர் கூறினர்.
மேலும், யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் பொலிஸ் தொழிலாளர் குழுவும் ஸ்டீவன் சண்டை ராஜினாமா செய்ய கோரியது.
இந்நிலையில், கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்ட அவர் அடுத்த சில மணிநேரங்களில் தனது ராஜினாமா கடித்தத்தை ஒப்படைத்தார். அதில் "யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் பொலிஸ் வாரியம் மற்றும் காங்கிரஸிற்கு, யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் காவல்துறையின் ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது மற்றும் உண்மையான கவுரவத்தை அளிக்கிறது" என்று கேபிடல் பொலிஸ் வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.
அவர், தனக்கு கிடைக்கக்கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பான சுமார் 440 மணிநேரம் தீரும் வரை, அதாவது ஜனவரி 17, 2021 வரை நோய்வாய்ப்பட்ட விடுப்பு நிலைக்கு மாறுவதாக அதில் கூறினார்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் பொலிஸ் வாரியத்தின் மற்ற உறுப்பினர்க;ளும் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.