கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்: தாயைத் தேடும் பொலிசார்
Police are searching for the mother of a newborn baby whose body was found on a Welsh shoreline: வேல்ஸ் கடற்கரை ஒன்றில், குழந்தை ஒன்றின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசார் அதன் தாயை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
வடக்கு வேல்ஸிலுள்ள மெனாய் நீரிணையின் அருகே கடற்கரையில் சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் உயிரற்ற உடல் கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
தாயைத் தேடும் பொலிசார்
அந்தக் குழந்தை சமீபத்தில்தான் பிறந்துள்ளது என்பதால், அதன் தாயும் பலவீனமாக இருக்கக்கூடும் என்றும், அவருக்கும் மருத்துவ உதவி தேவைப்படலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.

ஆகவே, அந்தப் பெண்ணுக்கு செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ள பொலிசார், நீங்கள் ஒருவேளை பயத்திலிருக்கலாம், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்கலாம், உங்களுடன் நாங்களும் இருக்கிறோம்.
உங்கள் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. என்றாலும், இப்போதைக்கு உங்கள் உடல் நலனைக் கவனிப்பது அவசியம்.
நீங்கள் ஒரு மருத்துவரையோ, பொலிசாரையோ அணுகவோ, பொலிஸ் நிலையம் ஒன்றை அணுகவோ செய்யலாம் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்துடன், அவரது உறவினர்கள், காதலர் அல்லது நண்பர்களுக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ள பொலிசார், உங்களுக்குத் தெரிந்தவர்களில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண் சமீபத்தில் வித்தியாசமாக நடந்துகொண்டிருந்தாலோ, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலோ, அந்தப் பெண்ணைக் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்கள்.
குறிப்பாக, அவருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதால், அவர் குறித்து எந்த தகவலாவது கிடைக்கப்பெற்றால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் பொலிசார்.