ஆசை ஆசையாக குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 85 பேர் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 50 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தில் ஒருவர் தினமும் இருசக்கர வாகனத்தில் வந்து குல்பி ஐஸ் விற்று வருகிறார்.
அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி உண்பது வழக்கம். நேற்றும் அவரிடம் குழந்தைகள் பலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
மாலையில் குல்பி ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு இரவு 10 மணி அளவில் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சிறுவர்கள் மயக்கம் போட்டு விழுந்ததில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.
50 குழந்தைகள் உட்பட 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம். ஓ., ரவிக்குமார் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக குழந்தைகளுக்கு சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து, குல்பி ஐஸில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப் போன ஐஸை விற்பனை செய்துள்ளாரா என்று போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், குல்பி ஐஸ் விற்பனை செய்த கண்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர், மேலும் அவரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |